சிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்

பின்லாந்து நாட்டை சேர்ந்த ‘சிமோ ஹயஹா’ என்ற போர் வீரன் ‘வின்டர் வார்’ என்ற போரின் போது சோவியத் படைகளை சேர்ந்த 505 வீரர்களை சுட்டு வீழ்த்தியதால் வரலாற்றின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக அறியப்படுகிறார். இதுவே வரலாற்றின் அதிகபட்ச தனி நபர் சாதனையாகும்.

சுமார் 100 நாட்கள் களத்தில் இருந்த இவர் சோவியத் படை வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதே போரின் போது சோவியத் படைவீரனின் தோட்டா ஒன்று இவரது கீழ் தாடையை துளைத்ததால் கோமா நிலையை அடைந்தார். போர் முடியும் வரை அவரால் சகஜ நிலைக்கு திரும்ப முடியவில்லை.

வாழ்க்கை

சிமோ 1905 ஆம் ஆண்டு பின்லாந்து – சோவியத் எல்லைப்பகுதியில் உள்ள ‘ராயுதஜார்வி’ என்ற சிறு கிராமத்தில் பிறந்தார். விவசாயம் இவரது தொழில். பின்லாந்து நாட்டில் ஒரு வருடம் ராணுவ பணி அனைவருக்கும் கட்டாயம். அந்த கால கட்டத்தில் மிக சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக கற்று தேர்ந்தார்.

பனிப்போர் – சோவியத் படைகள் – பின்லாந்து ராணுவம்…

1939 ஆம் ஆண்டு சோவியத் படைகள் பின்லாந்தினை ஊடுருவ தொடங்கிய நிலையில், பின்லாந்து ராணுவம் எதிரி படைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் ராணுவம் உதவிக்கு அழைத்தது. சிமோ ஹயஹாவும் களத்தில் இறங்கினார். இந்நிலையில் கடும் குளிர்காலம் வரவே சோவியத் படைகளால் முன்னேற முடியவில்லை. -20c முதல் -40c வரை கடும் குளிர் நிலவியதால் படை வீரர்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். இதை சாதகமாக்கிக்கொண்ட பின்லாந்து வீரர்கள் பனியில் அடையாளம் தெரியாத வண்ணம் உடையணிந்து பனிக்குள் மறைந்து சோவியத் படைகள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

இந்த சூழலில் தான் 505 சோவியத் வீரர்களை சுட்டு தள்ளினார் சிமோ ஹயஹா. இரு தரப்பிலும் கடும் சேதம் ஏற்பட்டதால் பின்னர் இரு நாடுகளும் போரை நிறுத்திக்கொண்டு சமாதான உடன்படிக்கை மேற்கொண்டனர். போரில் காயமுற்று கோமா நிலைக்கு திரும்பிய சிமோ ஹயஹா, 11 நாட்கள் கழித்து கோமாவில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பினார். தனது 97ஆம் வயது வரை வாழ்ந்த அவர் பல விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டு மறைந்தார்.

Share This: