டாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு ஐந்தாவது குழந்தை. மீனவ குடும்பத்தில் பிறந்த கலாம் அவர்கள் தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக இளம் பருவத்திலிருந்தே வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை
அப்துல் கலாம் தனது பள்ளி படிப்பை துவங்கியது ராமேஸ்வரம் நகரில் உள்ள துவக்கப் பள்ளியில் இருந்து தான். கல்வியில் சிறந்து விளங்கியதால் இவரது ஆசிரியர்கள் இவருக்கு மேல் படிப்பு படிக்க பெரிதும் உதவி புரிந்தனர். ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் உயர் நிலை பள்ளியில் உயர் கல்வி கற்றார். பின்னர் திருச்சி மாநகரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாட பிரிவில் சேர்ந்தார். இதன் பின்னர் தான் சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT கல்லூரியில் விண்வெளி பொறியியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றார். இங்கு தான் வான்வெளி பற்றிய ஆர்வம் அவரை பற்றி கொண்டது.
பணியாளராக…
தனது கல்லூரி படிப்பை முடித்ததும் இந்திய ராணுவத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்பது அப்துல் கலாமின் விருப்பம். விண்வெளி பொறியியல் படித்திருந்ததால் வானை பற்றிய ஆர்வமும் மிகுதியாக இருந்தது. எனவே இந்திய விமானப் படையில் விமானியாவது என முடிவெடுத்து அதற்கான பணியிடத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. எனவே DRDO என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மையத்தில் இளம் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். கலாமின் முதல் ப்ராஜெக்ட் இந்திய ராணுவத்திற்கு ஹோவர் கிராப்ட் எனப்படும் ஒரு வாகனத்தை வடிவமைப்பதாகும். இதை அவர் செய்து முடித்தாலும் சில பல காரணங்களுக்காக அந்த ப்ராஜெக்ட்
கைவிடப்பட்டது.
பின்னர் 1965 ஆம் ஆண்டு தனி ஆளாக ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டார். 4 வருட கடின உழைப்பிற்கு பின்னால் 1969 ஆம் ஆண்டு உயர் அதிகாரிகளிடம் தன்னுடைய ஆராய்ச்சியின் சாதனைகளை நிரூபித்து மேலும் சில பொறியாளர்களை உதவிக்கு வைத்துக்கொள்ள அனுமதி பெற்றார். இந்த நேரத்தில் தான் இந்திய வானியல் ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ (ISRO) தனது மிகப்பெரிய பிராஜெக்டான SLV III ஐ துவங்க திட்டமிட்டது. இதற்கு அப்துல் கலாம் தான் சரியான நபர் என முடிவு செய்து அவரை ISROவிற்கு பணி மாற்றம் செய்து அந்த திட்டத்தின் இயக்குநராக நியமித்தது.
இந்த SLV பிராஜெக்ட் இந்தியாவின் முதல் செயற்கைகோளை ஏந்தி செல்லும் வாகனம் என்பதால் சுமார் 10 ஆண்டுகள் தனது குழுவினருடன் மிக கவனமாக வடிவமைத்தார். 1979ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி ‘ரோகினி’ என பெயர் சூட்டப்பட்ட சோதனை செயற்கைக்கோளை, கலாம் குழுவினர் வடிவமைத்த SLV உதவியுடன் விண்ணில் ஏவுவது என முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட இந்த SLV சில பழுதுகள் காரணமாக ஏவப்பட்ட 317ஆவது வினாடியில் வெடித்து சிதறி வங்காள விரிகுடாவில் விழுந்தது.
கலாமின் தலைமை அதிகாரி இந்த தோல்வியின் போது கலாமிற்கு மிக்க பக்க பலமாக இருந்தார். இதனால் அடுத்த ஆண்டே கலாம் மற்றும் அவரது குழுவினர் மீண்டும் ஒரு ஊர்தியை வடிவமைத்தனர். 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி இந்த ஊர்தி ‘ரோகினி RS-1’ என பெயரிடப்பட்ட செயற்கைகோளினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தொடர்ந்து இந்த துறையில் கலாம் அவர்கள் வெற்றிகளை ருசித்தார். SLV-III மற்றும் PSLV ஆகிய இரண்டு ப்ராஜெக்ட்டுகளும் இவரது திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.
மிசைல் மேன் ஆப் இந்தியா
இந்த கால கட்டத்தில் தான் இந்தியா இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்க முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலுக்கு மத்திய அமைச்சரவை முதலில் மறுப்பு தெரிவித்துவிட்டது. அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த பிராஜெக்ட்டிற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரகசியமாக நிதி ஒதுக்கினார். இந்தியாவின் அக்னி, ப்ரிதிவி போன்ற அதி நவீன ஏவுகணைகள் இந்த காலகட்டத்தில் தான் உருவாகின. இதனால் இந்தியாவின் பலம் பல மடங்கு உயர்ந்தது. முதலில் மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சரவை பின்னர் இதனை ஆதரித்து இதற்க்கு சுமார் 388 கோடிகள் வரை நிதி ஒதுக்கியது. இந்த சாதனைகளால் தான் அப்துல் கலாம் அவர்கள் ‘மிசைல் மேன் ஆப் இந்தியா’ (Missile Man of India) என அழைக்கப்படுகிறார்.
அமெரிக்காவை பயமுறுத்திய பொக்ரான் சோதனை
இந்த நிலையில் தான் கலாம் அவர்கள் பிரதம மந்திரியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரின் செயல்பாடுகள் அவரை நாட்டின் மிக உயர்ந்த விஞ்ஞானியாக உயர்த்தியது. பொக்ரான் II அணுகுண்டு சோதனையில் கலாமின் செயல்பாடுகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்தியாவை மிக உன்னிப்பாக அமெரிக்க செயற்கைகோள்கள் நோட்டமிட்டு வருவதால், அவர்களின் கண்ணில் மண்ணை தூவி இந்த சோதனைகளை செய்வதென்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா அரசாங்கத்திலேயே பலருக்கு இதைப்பற்றி தெரியாது. அவ்வளவு இரகசியமாக செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. செயற்கை கோள்களுக்கு பெரிதும் வெளிப்படாமல் உள்ள பொக்ரான் மலைப்பகுதி சோதனைக்களமாக முடிவு செய்யப்பட்டது. அனைத்து பணியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்திய ராணுவ வீரர்களை போல உடையணிந்து பணியாற்றினார். இதனால் செயற்கைகோள் புகைப்படங்கள் கொண்டு யாருக்கும் சந்தேகம் வராது.
ஆராய்ச்சி கூடங்கள் பிரார்த்தனை கூடங்களின் வடிவில் கட்டப்பட்டன. வெடிகுண்டுகள் ராணுவ வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. அனைத்து வேலைகளும் இரவு நேரங்களில் நடத்தப்பட்டதால் யாராலும் கணிக்க முடியவில்லை. மதியம் சுமார் 3:45 அளவில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. வெற்றிகரமாக முடிக்கப்பட்ட சோதனைகளின் இறுதியில் அப்போதைய பிரதம மந்திரி திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பத்திரிக்கையாளர்களை அழைத்து இந்தியாவின் இரண்டாம் அணு ஆயுத சோதனை வெற்றியை பகிர்ந்து கொண்டார். அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளில் இந்தியா 6வது நாடாக இணைந்தது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இந்தியா மீது சில தடைகளை விதித்தன.
மருத்துவ துறையில்…
அப்துல் கலாம் அவர்கள் மருத்துவ துறையிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். அவரது நண்பரும் மருத்துவருமான ‘சோமா ராஜு’ உடன் இணைந்து 1998ஆம் ஆண்டு ‘கரோனரி ஸ்டென்ட்’ எனப்படும் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக செலுத்த உதவும் செயற்கை குழாயை மிக குறைந்த செலவில் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்தார். போலியோ பாதித்தவர்களுக்காக குறைந்த எடையுடைய கேலிபர் ஒன்றை வடிவமைத்தார்.
குடியரசு தலைவராக…
2002 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். ஒரு விஞ்ஞானி இந்தியாவின் குடியரசு தலைவராவது இதுவே முதல் முறை. இவரது 5 ஆண்டு கால பதவியில் ஒரே ஒரு கருணை மனுவின் மீது மட்டுமே முடிவெடுத்தார். இதுவே இவர் மீது சிலருக்கு அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. தனஞ்சோய் சட்டர்ஜீ எனப்படும் குற்றவாளியின் கருணை மனுவை மட்டுமே நிராகரித்தார். 2007ஆம் ஆண்டு தனது பதவி காலம் முடிந்தவுடன் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட விருப்பமிருந்தும் சில அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்க மீண்டும் போட்டியிடாமல் விலகிவிட்டார்.
மரணம்
2015 ம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் நாள் அப்துல் கலாம் அவர்கள் ஷில்லாங் நகரிலுள்ள IIM கல்லூரியில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பால் சுருண்டு விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் உயிர் உடலை விட்டு பிரிந்தது. இந்தியா விமான படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரில் அவரது உடல் கெளஹாத்தி நகரின் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ விமானத்தின் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட உடல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பின்னர் மதுரை விமான நிலையம் வழியாக ராமேஸ்வரம் வந்தடைந்த அவரது உடல் ‘பேய் கரும்பு’ எனப்படும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அப்துல் கலாம் சைவ உணவு பிரியர். தனது எளிமையான வாழ்வின் மூலம் பலருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அப்துல் காலம் அவர்கள். தனது வாழ்நாளில் ஒரு தொலைகாட்சி பெட்டி கூட இல்லாமல் வாழ்ந்தார். புத்தகங்களை தவிர வேறு எதையும் யாரிடமும் இருந்து அவர் வாங்கியது இல்லை. தனது நேரங்களை புத்தகங்களை எழுதுவதில் செலவு செய்வார். வீணை வாசிப்பது, கர்னாடக சங்கீதம் கேட்பது அப்துல் கலாம் அவர்களின் பொழுது போக்குகளாகும்.
கலாம் அவர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தார். பிற மதத்தினருடன் கண்ணியமாக பழகுவார். ‘சிறந்த மனிதன் மதத்தினை நல்ல நண்பர்களை உருவாக்க பயன்படுத்துவான். குறுகிய மனமுடையவர்கள் மட்டுமே மதத்தினை வெறுப்புணர்வுகளுக்காக பயன்படுத்துவர்.’ என்பது அவருடைய கருத்து. இந்திய அரசின் உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பல கல்வி நிறுவனங்கள் இவரது பெயருக்கு மாற்றப்பட்டன. ஒரிசா மாநிலத்தில் உள்ள ஒரு தீவு ‘அப்துல் கலாம் தீவு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.