துபாய் நகரில் உள்ள ‘புர்ஜ் கலீபா’ எனப்படும் கட்டிடம் தான் உலகின் மிக உயரமான கட்டிடமாகும். முதலில் ‘புர்ஜ் துபாய்’ என பெயரிடப்பட்ட இந்த கட்டிடம், பின்னர் ‘புர்ஜ் கலீபா’ என மாற்றப்பட்டது. பல்வேறு கடன் சுமைகளிலிருந்த துபாய் அரசிற்கு அபுதாபி மன்னர் ‘கலீபா பின் சையத் அல் நஹ்யான்’ பண உதவி செய்து பல பிரச்சனைகளில் இருந்து மீள உதவி செய்ததால் அவர் பெயரினை இந்த கட்டிடத்திற்கு சூட்டியது துபாய் அரசு.
இந்த கட்டிடம் 2004ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் துவங்கப்பட்டு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. ஜனவரி 4ம் தேதி 2010ஆம் ஆண்டு இது திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ‘ஆட்ரியன் ஸ்மித்’ என்ற அமெரிக்க கட்டிடக்கலை வல்லுநர் ஆவார். இவர்தான் சிக்காகோ நகரிலுள்ள புகழ் பெற்ற ‘டிரம்ப் டவர் ஹோட்டல்’, சீனாவின் ‘ஜின் மாவோ டவர்’ போன்ற பல கட்டிடங்களை வடிவமைத்தவர். சவுதி அரேபியாவில் தற்போது கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கட்டிட ப்ரொஜெக்ட்டான ‘ஜெட்டா டவர்’ கட்டிடத்தயும் இவர் தான் வடிவமைக்கிறார்.
இந்த ‘புர்ஜ் கலீபா’ வில் 30,000 குடியிருப்பு வீடுகள், 9 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. மேலும் இந்த கட்டிடத்தின் கீழ்தளம் ஒரு ஷாப்பிங் மால். இது துபாய் மால் என அழைக்கப்படுகிறது. சுமார் 7.5ஏக்கர் நிலப்பரப்பில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வளாகத்தினுள் ஒரு ஏரி கட்டப்பட்டுள்ளது.