இத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
1870ம் ஆண்டு இத்தாலி நாட்டின் ‘மிலன்’ மாகாணத்தின் ‘சிரவால்லே’ மாவட்டத்தில் பிறந்தார். இவரது முழு பெயர் ‘மரியா டெஸ்லா அர்டேமேசியா மாண்டிசோரி’ என்பதாகும். இவரின் தந்தை அலெசான்ட்ரா மாண்டிசோரி, ‘புகையிலை தொழிற்சாலை’ ஒன்றில் பணியாற்றி வந்தார். தாய் ‘ரெனில்தே ஸ்டெப்னி’ நிலவியல் துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மகன் இருந்தார். அவரது பெயர் ‘மரியோ மாண்டிசோரி’.
தனது 6ம் வயதில் ‘பிளோரென்ஸ்’ நகரின் ஒரு பள்ளியில் கல்வி கற்க துவங்கினார். 13ம் வயதில் அறிவியல் கற்பதற்காக தொழிற்பள்ளி ஒன்றில் இணைந்தார். 20ம் வயதில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். மருத்துவராக வரும் லட்சியம் கொண்ட இவரை ஊக்கப்படுத்த யாரும் இல்லாத வேளையில் தானாக முயற்சி எடுத்து ‘ரோம் பல்கலைக்கழகத்தில்’ மருத்துவராக பட்டம் வென்று முதல் பெண் மருத்துவராக சாதனை செய்தார்.
கல்வி முறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அவர் 1900ம் ஆண்டில் ஒரு பள்ளியின் இணை இயக்குனராக அமர்த்தப்பட்டார். அங்கு தான் முதல் முதலாக ‘மாண்டிசோரி’ கல்வி முறையை நடைமுறைப்படுத்தினார். இந்த கல்வி முறை சிறந்ததாக காணப்பட்டதால், அரசின் உதவியுடன் நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்றும் உலகெங்கும் பரவலாக ‘மாண்டிசோரி’ பள்ளிகள் நடைமுறையில் உள்ளன.
1952ம் ஆண்டு மே மாதம் 6ம் நாள் நெதர்லாந்து நாட்டின் ‘நோர்டவிஜ்க்’ நகரில் காலமானார்.