சூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. சுமார் 30,000 பணியாளர்களை கொண்டு இந்த கால்வாய் கட்டப்பட்டது. 193 கிலோமீட்டர் நீளமும், 24 மீட்டர் ஆழமும், 205 மீட்டர் அகலமும் கொண்டது இந்த கால்வாய்.
இந்த கால்வாயின் மூலம் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மிக எளிதானது… சரக்கு கப்பல்கள் பயணித்த தொலைவு சுமார் 7000 கிலோ மீட்டர்கள் வரை குறைந்தது. இந்த கால்வாயினை கடக்க சரக்கு கப்பல்களுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த இந்த கால்வாய் 1956ஆம் ஆண்டு எகிப்து அரசால் தேசியமயமாக்கப்பட்டது.
வடக்கே ‘சயீத்’ துறைமுகத்தில் ஆரம்பித்து தெற்கே ‘டியூபிக்’ துறைமுகம் வரை நீண்டு கிடக்கிறது இந்த கால்வாய். உலகின் கடல் வழி வர்த்தகத்தில் சுமார் 8% இந்த கால்வாய் வழியாக நடக்கிறது.